ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கைது
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கைது
சவுடு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக, ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.,) சரவண பெருமாள் பணிபுரிந்து வருகிறார். சவுடு மண் எடுப்பது போன்ற பணிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் தான் முறைப்படி அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அனுமதி கோரி வந்த ஒருவரிடம், ரூ.50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று சரவண பெருமாள் கேட்டுள்ளார்.ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த மனுதாரர், ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இன்று காலை போலீசார் அறிவுறுத்தலின்படி மனுதாரர் ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரம் பணத்தை கொண்டு சென்று கொடுத்தார்.அதை கோட்டாட்சியர் சரவண பெருமாள் வாங்கியபோது, மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த கோட்டாட்சியரின் டிரைவர் சுந்தர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபிறகு, அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. லஞ்சம் கேட்டால் எங்களிடம் புகார் சொல்லுங்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை பிரத்யேக வாட்ஸ்அப் எண் (94981 80936) அறிவித்து பிரசாரம் செய்கிறது. அப்படியிருந்தும், துணை கலெக்டர் அந்தஸ்திலான வருவாய் கோட்டாட்சியர், லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்டிருப்பது, அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வஞ்சத்தை அரசு அலுவலகங்களில் முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வரும் நிலையில் அரசு ஊழியர்களும் கடமை உணர்வுடன் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் பிடிபடும் அனைவரும் உடனடியாக நிரந்தர பதவி நீக்கம் செய்து அவர்களது சொத்துக்கள் வருவாய்க்கு அதிகமாக சேர்த்த அசையும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



