சஷ்டி, என்றால் என்ன

சஷ்டி, என்றால் என்ன

’சஷ்டி’ என்றால் என்ன? 

சஷ்டி என்பதற்கு ஆறாம் நாள் என்று பொருள். வளர்பிறை, தேய்பிறை அதாவது அமாவாசை, பௌர்ணமிக்கு பிறகு வரும் ஆறாவது (திதி) நாளாகும். இந்த நாள் பகவான் முருகனுக்கே அர்ப்பணிக்கப்பட்டது. ஆன்மீக சக்தியை வழங்கும் தெய்வீக நாளாக கருதப்படுகிறது.

‘கந்த சஷ்டி’ என்றால் என்ன?

வருடத்திற்கொரு முறை மிகுந்த பக்தியுடன் கடைப்பிடிக்கப்படும் ஆறுநாள் விரதம் தான் கந்த சஷ்டி. இது ஐப்பசி மாதம் அக்டோபர்–நவம்பர் மாதத்தில் வளர்பிறை அமாவாசைக்கு அடுத்த பிரதமை திதியில் தொடங்கி ஆறாவது நாளான சஷ்டி திதியில் நிறைவு பெறும். முருகப் பெருமான் சூரபத்மன் என்ற அசுரனை அழித்து, தேவர்களுக்கு அமைதியை அளித்த நாள் இதுவே.

‘மகா கந்த சஷ்டி’ என்றால் என்ன?

சில வருடங்களில் முருகனுக்கு உரிய நாள், திதி, நட்சத்திரம் இணையும் போது அது மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. இதுவே “மகா கந்த சஷ்டி” என்று அழைக்கப்படுகிறது.

இந்த வருடம் கந்த சஷ்டி என்று ஆரம்பித்து, எப்போது நிறைவடைகிறது?

கந்த சஷ்டி, ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை நாளில் (22.10.25 புதன்கிழமை) ஆரம்பித்து, சஷ்டி திதி வரை (27.10.25 திங்கட்கிழமை) ஆறு நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. முதல் நாள் கொடி ஏற்றத்துடன் தொடங்கி, ஆறாம் நாள் சூரசம்ஹாரம் நிகழ்வோடு நிறைவடையும்.

முருகன் திருக்கல்யாணம் எப்போது?

சூரசம்ஹாரத்திற்கு அடுத்த நாள் (28.10.25 செவ்வாய்க்கிழமை) சப்தமி திதியில் முருகன் தேவயானை திருக்கல்யாணம் நடைபெறும். இந்த நாள் மண வாழ்விற்கும், மன அமைதிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் சிறந்த நாள் எனக் கருதப்படுகிறது.

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

கந்த சஷ்டி விரதம் பொதுவாக ஆறு நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆறு நாட்களிலும் அதிகாலையில் நீராடி, பூஜை அறையில் விளக்கேற்றி, முருகப் பெருமானை வழிபட வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. கோயிலிலேயே தங்கி விரதம் இருப்பதும் கூடுதல் சிறப்பு.

விரதம் இருக்கும் போது கடைபிடிக்கப்படும் உணவு முறை பற்றி பார்ப்போம்.

முழுமையான விரதம்: முழுமையாக உணவுகளை தவிர்த்து நீரை மட்டும் பருகுதல். ஒரு நாளுக்கு ஒரு மிளகு வீதம் ஒவ்வொரு நாளும் கூட்டிக் கொண்டே சென்று ஏழாவது நாள் ஏழு மிளகு மற்றும் தண்ணீரை மட்டும் உட்கொண்டு திருக்கல்யாணத்தை பார்த்த பிறகு உணவருந்துவது தான் கடுமையான விரதம்.

பழ விரதம்: பழம், பால், இளநீர், நீர் மட்டும் உட்கொள்வது.

மிதமான விரதம்: மதிய வேளை சைவ உணவு (உப்பு, மசாலா இல்லாமல்) தயிர் சாதம், பால் சாதம் உட்கொண்டு இருப்பது, முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை மற்ற இரு வேளைகளிலும் சாப்பிடலாம். இதுவும் முடியாதவர்கள் ‘சஷ்டி’ அன்று ஒரு நாள் விரதம் இருக்கலாம்.

அவரவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றார் போல் விரதம் இருப்பதே சிறப்பு. நீரை தேவையான அளவு கட்டாயம் அருந்த வேண்டும். சூரசம்ஹாரம் முடிந்த பிறகு விரதத்தை நிறைவு செய்பவர்களும் உண்டு. திருக்கல்யாணத்தை பார்த்த பிறகு விரதத்தை பூர்த்தி செய்பவர்களும் உண்டு. அவரவர் மனதை பொறுத்தே விரதம். உண்ணா நோன்பு உடலுக்கு நல்லது. ஆன்மாவுக்கு பலம் தருவது. உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களை கூட உண்ணா நோன்பின் மூலம் நீக்கிவிட முடியும் என்கிறது மருத்துவம். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் கடுமையான விரதங்களைத் தவிர்ப்பது நல்லது.

முக்கியமாக கந்தர் அனுபூதி, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், சத்ரு சம்ஹார வேல் பதிகம் போன்ற முருகனுக்கு உரிய மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். வேல் வழிபாடு, தியானம், அன்பு, அமைதி ஆகியவற்றுடன் மனதை சுத்தப்படுத்த வேண்டும். நாள் முழுவதும் இறை சிந்தனையிலேயே இருப்பது அவசியம். ’ஓம் சரவணபவ’ என்ற மகா மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்கலாம்.

‘கந்த சஷ்டி’ விரதத்தின் நோக்கம் என்ன? 

முருகன் சூரபத்மனை வதம் செய்தது, ஆன்மாவின் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களை (குறைகளை) அழித்து, ஆன்மாவை ஆண்டவனுடன் ஒன்று சேர்ப்பதைக் குறிக்கிறது. எனவே, இந்த விரதம் அகங்காரத்தை அடக்கி, தூய சிந்தனைகளை வளர்க்க உதவுகிறது. நமக்குள் இருக்கும் அசுர குணங்களான ஆசை, கோபம், பேராசை, ஆசையினால் வரும் மயக்கம், அகந்தை, பொறாமை ஆகியவற்றைக் அழிப்பதே சூரசம்ஹாரம் ஆகும். முருகன் இவற்றை அழிக்கும் சக்தியாகப் போற்றப்படுகிறார்.

‘கந்த சஷ்டி விரதம்’ இருப்பதால் என்ன பயன்? 

"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, சஷ்டி விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் (குழந்தை பாக்கியம் கிட்டும்) என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

வாழ்க்கையில் உள்ள தீராத பிரச்சனைகள், நோய், கடன் தொல்லைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற இந்த விரதம் உதவுகிறது. 

முருகனின் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வதால் திருமணத்தடை நீங்கும், எமபயம் அகன்று, முருகனின் அருள் முன்னிற்கும்.