தேசிய அறிவியல் தின விழா – 2026 அறிவியலில் பெண்கள்: விக்சித் பாரத்தை (வளர்ந்த இந்தியாவை) ஊக்குவித்தல்”

தேசிய அறிவியல் தின விழா – 2026 அறிவியலில் பெண்கள்: விக்சித் பாரத்தை (வளர்ந்த இந்தியாவை) ஊக்குவித்தல்”

தேசிய அறிவியல் தின விழா – 2026 அறிவியலில் பெண்கள்: விக்சித் பாரத்தை (வளர்ந்த இந்தியாவை) ஊக்குவித்தல்”

புதுக்கோட்டை கூடல்நகரில் இயங்கிவரும் தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக்கழகம் மற்றும் திருமயம் ஒன்றியம், திருவானைக்காவன்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் தேசிய அறிவியல் தின விழா – 2026 நடத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் எஸ்.முத்துலெட்சுமி தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர், முனைவர் வி. புவனேஸ்வரி மற்றும் அண்ணாமலைப்பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் செல்வி வி. பிரியதர்ஷிணி கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்கள் அப்போது அவர்கள் பேசியதாவது.

“அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறைகளில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. ஆய்வகங்களில் ஆராய்ச்சி மேற்கொள்வதிலிருந்து விண்வெளிசாதனைகள் வரை பெண்கள் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். உலக அறிவியல் வரலாற்றில் மேரிகியூரி போன்ற முன்னோடி விஞ்ஞானிகள் பெண்களுக்கு புதிய வழித்தடத்தை உருவாக்கினர். அவர்களின் சாதனைகள் உலகம் முழுவதும் பெண்களை அறிவியல் துறைக்கு ஈர்த்தது. இந்தியாவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய கல்பனா சாவ்லா இளம் தலைமுறைக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். மேலும், இஸ்ரோவில் பல பெண்விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் மற்றும் விண்வெளித்திட்டங்களில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். ஏவுகணை தொழில்நுட்பத்தில் ‘மிசைல்வுமன்’ எனப் புகழப்படும் டெஸ்ஸி தோமஸ் போன்றோர் நாட்டின் பாதுகாப்புத்துறையில் பெரும்சாதனைகள் புரிந்துள்ளனர். அரசின் ஊக்கத்திட்டங்கள் மற்றும் கல்வி வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், கிராமப்புறங்களிலிருந்தும் பெண்கள் அறிவியல் துறையில் முன்னேறி வருகின்றனர். ஆய்வகத்தில் தொடங்கிய பெண்களின் பயணம் இன்று ஆகாயம் வரை விரிந்திருப்பது, சமத்துவமான சமூகத்தின் வளர்ச்சிக்கான முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது என்றும் இந்தியாவை 2047ஆம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ந்தநாடாக மாற்றும் நோக்கில் “விக்சித்பாரத்” பார்வைத் திட்டம் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்ய புதுமை, பொறுப்பு மற்றும் நிலைத்த வளர்ச்சி ஆகியவை முக்கிய தளங்களாக வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த முயற்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சமூகச் சமத்துவத்தை ஒருங்கிணைக்கும் திட்டமாக பார்க்கப்படுகிறது. உள்கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் சேவைகள் விரிவு, பசுமை ஆற்றல் பயன்பாடு போன்ற துறைகளில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குதிறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கி, தொழில் முனைவுத்திறனை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். கிராமப்புற வளர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்தையும் சமநிலைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமூகப் பொறுப்புணர்வுடன் மக்கள் பங்கேற்பை உறுதி செய்வதன் மூலம், “விக்சித்பாரத்” கனவு நனவாகும் என்ற நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. புதுமையை தழுவி, பொறுப்புடன் செயல்பட்டு, முன்னேற்றத்தை நோக்கி இந்தியா உறுதியுடன் பயணிக்கிறது” என்று கருத்துரை வழங்கினார்கள்.

அறிவியல் ஆராய்ச்சிக்கழக இயக்குநர் டாக்டர் ச.விஜிக்குமார் தேசிய அறிவியல் தின சிறப்புரை ஆற்றினார். முன்னதாக பட்டதாரி ஆசிரியர் பா.விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார், இடைநிலை ஆசிரியர் ப.சுகந்தி நன்றி கூறினார். இந்நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வான்தொலைநோக்கியை பயன்படுத்தி நட்சத்திரங்களை பார்ப்பது பற்றியும், அதி நவீன நுண்ணோக்கி பயன்பாடும், கையாளும் விதங்கள் பற்றிய பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் வண்ண காகிதங்களில் ஓரிகாமி மூலம் பல்வேறு வடிவங்கள் செய்து காண்பித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக்கழகத்தின் சார்பில் நிர்வாக அலுவலர் சி..கார்த்திகேயன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்.