கந்தர்வகோட்டை அருகே தனியார் மதுபான ஆலை முற்றுகை – 300-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்
கந்தர்வகோட்டை அருகே தனியார் மதுபான ஆலை முற்றுகை – 300-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான ஆலையில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆலையில் 600-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அதிகப்படியான பணிச்சுமையை குறைக்க வேண்டும், பணிநேர இடைவெளியில் தேனீர் அருந்துவதற்கான உரிய நேரம் வழங்க வேண்டும், மதிய உணவுக்கான போதிய இடைவேளை மற்றும் ஓய்வு நேரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பெண்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும், நீண்ட காலமாக பணியாற்றி வரும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பணிச்சுமையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தங்களது நீண்டகால கோரிக்கைகளுக்கு நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.



